12வது முறையாக மும்பை இந்தியன்ஸ் அணி படுதோல்வி.

        மும்பை இந்தியன்ஸ் அணி தனது முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மோதியது. டாஸ் வென்ற மும்பை அணியின் புதிய கேப்டன் ஹார்டிக் பாண்டியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். குஜராத் அணியில் தொடக்க வீரர்களாக விருத்திமான் சகா மற்றும் சுப்மன் கில் களமிறங்கினர். சகா 19 ரன்கள் எடுத்திருந்தபோது பும்ரா பந்துவீச்சில் போல்டானார். பின்னர் களமிறங்கிய சாய் சுதர்சன், சுப்மன் கில்லுடன் இணைந்து பொறுமையாக விளையாடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினார்.

        கில் 31 ரன்கள் எடுத்திருந்தபோது  சிக்ஸர் அடிக்க ஆசைப்பட்டு, சாவ்லா பந்துவீச்சில் கேட்ச் ஆனார்.  பிறகு களம் இறங்கிய வீரர்கள் பெரிய அளவில் சோபிக்காததால் குஜராத் டைட்டன்ஸ் அணி 20  ஓவர்கள் முடிவில் 6  விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் குவித்தது. அந்த அணியில் சாய் சுதர்சன் அதிகபட்சமாக 45 ரன்கள் குவித்தார்.  மும்பை அணியில் பும்ரா 4 ஓவர்களில் 14 ரன்கள் விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்.அடுத்து  களமிறங்கிய மும்பை  அணியின் இசான் கிசான் முதல் ஓவரிலேயே ரன் ஏதும் எடுக்காமல்  ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார்.  

        தனது அறிமுக போட்டியில் களமிறங்கிய நமன் திர்  அதிரடியாக விளையாடி 10 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். பின்னர் களமிறங்கிய ப்ரேவிஸ், ரோகித் சர்மாவுடன் இணைந்து பொறுமையாக விளையாடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினார். இந்த ஜோடி மூன்றாவது விக்கெட்டுக்கு 67 ரன்கள்  சேர்த்திருந்தபோது ரோகித் சர்மா 43 ரன்களில் ஆட்டம் இழந்தார். பின்பு வந்த வீரர்கள் தரமான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறியதால் மும்பை அணி  6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.  மும்பை அணியில் ப்ரேவிஸ் அதிகபட்சமாக 46 ரன்கள் குவித்தார். 

         குஜராத் அணியில் ரசித் கான், சாய் கிஷோர் இருவரும் சிறப்பாக பந்து வீசி அணியை வெற்றி பெறச் செய்தனர்.  சாய் சுதர்சன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். மும்பை இந்தியன்ஸ் அணி 2013 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 12 வது முறையாக தனது முதல் போட்டியில் தோற்று இருக்கிறது. 


 

No comments

Powered by Blogger.